மெரினாவில் உள்ள காந்தி சிலை அகற்றமா?
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து தமிழக அரசு இடம் மாற்றிக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சிலை இன்னும் ஒரு சில நாட்களில் இடமாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சிலையின் இடமாற்றம் தற்காலிகமானதுஎன்றும் அதன்பின் மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்ததும் மீண்டும் பழைய இடத்தில் காந்தி சிலை வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட்ட பின் மீண்டும் பழைய இடத்திற்கு வைக்கப்படும் வரை சிலையை மக்கள் பார்வையிடவோ, மாலை அணிவித்து மரியாதை செலுத்தவோ அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது.
மெட்ரோ ரயில் பணிகளுக்காக ராட்சச இயந்திரங்கள் பயன்படுத்தும்போது சிலைக்கு சேதம் ஏதும் ஏற்படக்கூடாது என்ற காரணத்திற்காக தான் தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.