சிறுமிகள் குறித்து ஆபாச பாடல் : பிரபல கானா பாடகர் சரவெடி சரண் கைது
சிறுமிகள் குறித்து ஆபாச பாடல் பாடியதாக கானா பாடகர் சரவெடி சரணை திருவள்ளூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனிடையே கடந்த சில நாட்களாகக் கேட்கக் கூசும் வார்த்தைகளில் ஒருவர் பாடியிருந்த ஆபாசமான பாடல் இணையத்தில் வைரலானது.
இந்த பாடல் வரிகளைக் கண்டித்த பலரும் இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பெண் குழந்தைகளுக்கு எதிரான கருத்துக்களையும் கொண்டுள்ள இந்த பாடல் பெண் குழந்தைகளுக்கு எதிராக வன்மத்தைக் கக்கும் வகையில் இருப்பதாகப் பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் தனது ட்விட்டரில், இந்த நபர் குறித்த தகவல்களைத் தெரிவிக்கலாம் என்றும் இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த ஆபாசமான பாடலை பாடியவர் சரவெடி சரண் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபரைத் திருவள்ளூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாகத் திருவள்ளூர் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குழந்தைகளைக் கடவுளுக்குச் சமமானவர்களாகக் கருதும் நமது நாட்டில் அவர்களது மென்மையான மற்றும் முதிர்ச்சியற்ற மனதினை பயன்படுத்தி அவர்களுக்கெதிராக பாலியல் ரீதியாக வன்முறையைக் கையாளும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்வது வேதனைக்குரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்பது அந்த குழந்தைகள் மற்றும் அந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு வாழ்நாள் அழுவதும் தீரா துயரை அளித்து அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
டோனி ராக் - போட்டி கானா என்ற பெயரில் சரவணன் (எ) சரவெடி சரண் என்கிற கானா பாடகர் பாடியுள்ள ஒரு வீடியோ பாடலில் பச்சிளம் பெண் குழந்தைகளை ஆபாசமாகச் சித்தரித்திருப்பது திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கவனத்திற்கு வந்ததையொட்டி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது போன்ற கடுமையான நடவடிக்கையின் மூலமே இத்தகைய குற்றங்களைத் தடுக்க முடியும் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இவ்வாறாக இன்னல்கள் ஏதும் நிகழ்ந்தால் சற்றும் தயக்கமின்றி அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்குமாறு திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
மேலும் இவ்வாறான குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறையைத் தூண்டும் விதமாக ஏதேனும் வீடியோ பதிவுகளோ அல்லது குறுஞ்செய்திகளோ தங்கள் கவனத்திற்கு வரும்போது அந்த பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு 6379904848 என்ற அவரது பிரத்யேக எண்ணில் தொலைப்பேசி மூலமாகவோ, வாட்ஸ்ஆப் மூலமாகவோ தகவல் தெரிவித்துக் காவல் துறையுடன் இணைந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை ஒழிக்க உதவுமாறு திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.