ரெய்னாவிற்கு வாய்ப்பு கொடுக்காதீங்க - எதிர்ப்பு தெரிவிக்கும் முன்னாள் வீரர்
முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுரேஷ் ரெய்னாவிற்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் லீக் போட்டி நேற்று நிறைவடைந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய நான்கு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான முதல் குவாலிபயர் போட்டி இன்று (அக்டோபர் 10) நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால், இந்த போட்டியை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளது.
இதனிடையே முன்னாள் வீரர்கள் இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்கள் மற்றும் கணிப்புகளை தெரிவிப்பதோடு, இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், முதல் குவாலிபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக ராபின் உத்தப்பாவிற்கே ஆடும் லெவனில் இடம் கொடுக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கடந்த இரண்டு போட்டிகளிலும் ராபின் உத்தப்பா சரியாக விளையாடவில்லை என்றாலும், நிச்சயமாக அவர் பழைய பார்மிற்கு திரும்புவார் என நம்புகிறேன். எனவே டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக ராபின் உத்தாப்பாவிற்கே சென்னை அணி ஆடும் லெவனில் இடம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.