G-pay மூலம் லட்சக்கணக்கில் கொள்ளையடித்த பலே கில்லாடி மாணவி - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை அரும்பாக்கம், ஜானகிராமன் காலனியைச் சேர்ந்தவர் அகஸ்டின் (58). இவர் BSNL அலுவலகத்தில் பணிபுரிந்தவர். கடந்த 2 ஆண்டுகளாக விருப்ப ஓய்வு பெற்று சாலிகிராமத்தில் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இத்தம்பதிகளுக்கு குழந்தைகள் கிடையாது.
அகஸ்டின் வீட்டில் கடந்த 15 ஆண்டுகளாக வளர்மதி (45) வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் சுமித்ரா (19). சுமித்ராவை அகஸ்டியன் தன் மகள் போல வளர்த்து வந்துள்ளார். சுமித்ரா எப்போதும் அகஸ்டின் வீட்டில்தான் இருப்பார்.
இந்நிலையில், அகஸ்டின் அரும்பாக்கத்தில் ஒரு காலி இடம் வாங்கியிருந்தார். கடந்த 3ம் தேதி வீடு கட்ட 20 லட்சம் ரூபாயை எடுப்பதற்காக சாலிகிராமத்தில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றார். இந்தியன் வங்கிக்கு சென்று பணம் இருப்பை பரிசோதித்து செய்தார். ஆனால், வங்கி கணக்கில் வெறும் 8 லட்சம் ரூபாய் மட்டுமே இருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே, வங்கி மேலாளரை அணுகி, இது குறித்து விசாரித்தார். அப்போது, வங்கி மேலாளர், பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தார். அப்போது, அகஸ்டின் மொபைலில் கூகுள் பே மூலமாக 2 வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனை நடந்திருப்பதை தெரிவித்தார்.
அதற்கு அகஸ்டின், எனக்கு கூகுள் பே எப்படி பயன்படுத்துவது கூட தெரியாது என்று கதறி அழுதுள்ளார். உடனே, மேலாளர் நீங்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அகஸ்டின் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், வளர்மதியின் மகள் சுமித்ரா, அகஸ்டின் மொபைலிலிருந்து பிளே ஸ்டோர் மூலம் கூகுள் பே செயலியை பதிவிறக்கம் செய்து, அதிலிருந்து தனது காதலன் சதீஷ் குமாரின் 2 வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனையை சிறுகச் சிறுக மாற்றியுள்ளார். மேலும், சுமித்ரா தினமும் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை தன் காதலனுக்கு பணம் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
அகஸ்டின் போலீசில் புகார் கொடுத்தது அறிந்த சுமித்ராவும், சதீஷ்குமாரும் தலைமறைவாகிவிட்டனர். திருடிய பணத்தை வைத்து இருவரும் பெங்களூர், கேரளா, மும்பை என்று உல்லாசமாக சுற்றி திரிந்து வந்துள்ளனர்.
கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஆகியும், போலீசார் தங்களை பிடிக்க முடியாத காரணத்தினால், தாயை பார்க்க சுமித்ரா சென்னை கோயம்பேடு அருகே வந்துள்ளார்.
அப்போது, சைபர் கிரைம் போலீசார் சுமித்ரா மற்றும் அவருடைய காதலன் சதீஷ்குமார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 4 புதிய செல்போன்கள், ரூ.79 ஆயிரம் ரொக்கப்பணம், 2.5 சவரன் தங்கச் செயின் மற்றும் புதிய இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.