இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு: உடல் நல்லடக்கம் செய்யப்படாது என தகவல்
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் (99), நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிலிப்பின் இறுதிச்சடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, ஏப்ரல் 17-ம் தேதி மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு நடைபெறும். இந்த இறுதிச்சடங்கு நிகழ்வுகள் அனைத்தும் நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 17-ம் தேதி மாலை 3 மணிக்கு பிரிட்டன் முழுவதும் ஒரு நிமிட மவுன அஞ்சலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் 30 பேர் கலந்துகொள்ளவுள்ளனர், பிலிப்பின் இறுதி ஆசைக்கு இணங்க ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் அமைந்துள்ள அரச பரம்பரையினருக்கான பெட்டகத்தில் அவர் பூத உடல் உரிய மரியாதையுடன் பாதுகாக்கப்படும் என்ற தகவல் கசிந்துள்ளது.
மேலும், ராணியார் இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பின்னர், இருவரது உடலும் ஒன்றாக நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அரண்மனை வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
