"வேடிக்கை பார்த்தவன் தற்போது அதே கட்டிடத்தில் விளக்கை ஏற்றி வைத்துள்ளேன்" : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பாரம்பரியமிக்க சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கட்டிடம் ரூ.1 கோடியே 81 லட்சம் செலவில் ஒளிரும் வண்ண விளக்குகளால் ஜொலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதனை மக்களின் பார்வைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசியதாவது:- நான் பள்ளிக்கூடத்தில் மாணவனாக படித்துக்கொண்டிருந்தபோது, பள்ளியில் இருந்து கல்வி சுற்றுலா அழைத்து செல்வார்கள்.

சென்னையில் அடையாறு ஆலமரம், மியூசியம், உயிரியல் பூங்கா, காந்தி மண்டபம், ரிப்பன் கட்டிடம், விக்டோரியா மஹால் இதுபோன்ற கட்டிடங்களை பார்க்க முடியும். அப்போது வேடிக்கை பார்த்தேன். வேடிக்கை பார்த்த எனக்கு இன்று இந்த கட்டிடத்தில் விளக்கு எரியவைக்கக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பெருமைப்படுகிறேன் எனக் கூறினார்.