தடுப்பூசி போட்டால் மட்டுமே மின்சார ரயிலில் பயணிக்க அனுமதி
2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே மின்சார ரயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா 2வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் மின்சார ரயில்களில் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது.அதன்பின் அத்தியாவசிய, சுகாதார மற்றும் அரசு ஊழியர்கள் மட்டுமே மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் அலுவலகம், வேலைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களை மின்சார ரயில்களில் அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன. இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சமூகவலைதளம் மூலமாக பொதுமக்களிடம் உரையாற்றினார்.
அப்போது ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்தார். அதேசமயம் 2வது தவணை தடுப்பூசி போட்டவர்கள்14 நாட்கள் முடிந்தபிறகு ரயில்களில் பயணம் செய்யலாம் என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் தடுப்பூசி போட்ட விவரங்களை கொடுத்து அதில் டிக்கெட், சீசன் பாஸ் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.