ஞாயிறு முழு ஊரடங்கில் இவை இயங்கும் - தமிழக அரசு அறிவிப்பு

tngovernment sundaylockdown
By Petchi Avudaiappan Jan 21, 2022 11:24 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 ஞாயிறன்று முழு ஊரடங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் அன்றைக்கு அவசர தேவைகளுக்காக ஆட்டோக்கள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஆணை எண்.30 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நாள் 12-1-2022ன்படி, கடந்த 16-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

தற்போது தமிழ்நாட்டில் கொரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொது மக்கள் நலன் கருதி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 23-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்; தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும்.

மேலும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும்.மாவட்ட இரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும்.

கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.