தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு - தேவையில்லாமல் சுற்றினால் வாகனம் பறிமுதல் என எச்சரிக்கை

முழு ஊரடங்கு fullcurfew
By Petchi Avudaiappan Jan 09, 2022 12:16 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘ஒமைக்ரான்’ வைரசும் அச்சுறுத்தி வருவதால் இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. 

அதன்படி நேற்று இரவு ஊரடங்கு, இன்று முழு ஊரடங்கு, நாளை அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு என தொடர்ந்து 31 மணி நேரம் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படாது. ‘டாஸ்மாக்’ மதுபான கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

பொதுப்போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில் சேவை இயங்காது. ஆனால் மின்சார ரெயில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். சென்னையில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். நகரில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனையை மேற்கொள்ள உள்ளனர். மேம்பாலங்கள் அடைக்கப்பட்டு, சிக்னல்கள் நிறுத்தப்படும் என்று தெரிகிறது.

முழு ஊரடங்கான இன்று அவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். எனவே தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போலீசார் சார்பில் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வாகன சோதனையின்போது வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனிதநேயத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரைகள் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.