தப்பியோடிய மகிந்த ராஜபக்சே : கோவையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்..!
மகிந்த ராஜபக்சே தப்பி ஓடியதற்க்கு தமிழகத்தில் உள்ள கோயம்புத்துார் மாவட்டத்தில் இடது சாரி கட்சிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் போராட்டங்கள் வெடித்துள்ள சூழலில், மகிந்த ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி ஓடியதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதனை கொண்டாடும் விதமாக கோவையில் இடது சாரி மற்றும் முற்போக்கு அமைப்பினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் அவதியடைந்து வரும் நிலையில் அங்கு போராட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
திங்கட்கிழமை இலங்கையில் நடைபெற்ற கலவரத்தில் அந்த நாட்டின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.
அவர் பிரதமர் பதவியில் இருந்தும் விலகினார். இதனிடையே மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி அவர் ராணுவ பாதுகாப்புடன் கப்பல் மூலமாக வெளிநாட்டிற்கு தப்பிவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த சூழலில், மகிந்த ராஜபக்சே சொந்த நாட்டு மக்களாலேயே விரட்டப்படுவதை கொண்டாடும் விதமாக கோவையில் இடது சாரி மற்றும் முற்போக்கு அமைப்புகள் பட்டாசுகள்வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
கோவை சிங்காநல்லூரில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை முன்பு ஒன்றுகூடிய முற்போக்கு அமைப்பினர் சாலை நடுவே பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "1.5 லட்சம் அப்பாவி தமிழகர்களை கொன்று குவித்த ரஜபக்சே உயிருக்கு பயந்து ஒளிந்து கொண்டுள்ளார். சொந்த நாட்டு மக்களாலேயே விரட்டப்படுகிறார். இதனை கொண்டாடும் விதமாகவே பட்டாசுகள் வெடித்தோம்." என்றனர்.