இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு..அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வர வேண்டாம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே..!
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வர வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடந்த மூன்று மாதங்களாக வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய எரிபொருள் இறக்குமதி செய்யமுடியாமல் அங்குள்ள துறைமுகங்களில் கப்பல்கள் காத்திருக்கின்றன.

எரிபொருளை இறக்குமதி செய்ய போதுமான டாலர்கள் இல்லாததால் எரிபொருள் தட்டுப்பாடு அதிகமாக காணப்படுகிறது.
கடந்த வாரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து வடக்கு பகுதிகளுக்கு எரிபொருளானது அனுப்பி வைக்கப்பட்டது.
இருப்பினும் வடக்கு மாகாண பகுதிகளான யாழ்ப்பாணம் பகுதியில் எரிப்பொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக இன்று காலை தங்களது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
2 கிலோ மீட்டர் துாரம் வாகனங்களுடன் பொதுமக்கள் அணிவகுத்து வரிசையில் நின்றனர். விவசாயிகள் தங்களது டிராக்டர்களுடன் நீண்ட வரிசையில் எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருந்தனர்.

இலங்கையில் வரும் ஜுன் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு நீடிக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை அத்தியாவசிய பணிகளை தவிர்த்து இருக்க கூடிய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பதாகவும்,
பொதுமக்கள் பயணங்களை தவிர்க்கவும் கூறியுள்ளார்.