"பசி எடுத்தால் எடுத்து சாப்பிடவும்" ... கொரோனா காலத்தில் பசியாற்றும் வியாபாரி...
கோவில்பட்டியில் பழக்கடைக்காரர் ஒருவர் கடையில் வாழைப்பழ தார்களை தொங்கவிட்டு உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவி செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்து வரும் நிலையில்,கடந்த இரண்டு வாரமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக பல பேர் வேலை இன்றியும், வருமானம் இல்லாமலும் தவித்து வருகிறார்கள்.
சிறிய அளவிலான கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தவர்கள், சாலையோர வியாபாரிகள் என பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் சாலையோரங்களில் தங்குபவர்களும், கேட்பாரற்று சுற்றித்திரிபவர்களும் ஒரு வேளை உணவுக்காக திண்டாடி வருவது தொடர்கதையாகி வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழும் செயல் ஒன்று அனைவரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள கடலையூர் சாலை சந்திப்பு பஸ் நிறுத்தம் அருகே பழக்கடை வைத்திருக்கும் முத்துப்பாண்டி என்பவர் தனது பூட்டிய கடை முன்பு தினமும் வாழைப்பழ தார்களை தொங்க விடுவதோடு அதன் அருகில் ஒரு சிலேட்டில், 'பசி எடுத்தால் எடுத்து சாப்பிடவும்' என்றும், இலவசம் என்பதால் யாரும் வீணாக்க வேண்டாம் எனவும் எழுதியுள்ளார்.
இதையடுத்து பசியில் இருக்கும்போது அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள் என ஏராளமானோர் அந்த வாழைப்பழங்களை எடுத்து சாப்பிட்டுச் சென்றனர். மேலும் அருகில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இருப்பதால் அங்கு வருபவர்களில் உணவு கிடைக்காமல் தவிப்பவர்களும் இந்த பழங்களை எடுத்து சாப்பிட்டு வருகின்றனர். நாளொன்றுக்கு நான்கு முதல் ஐந்து வாழைத்தார்களை இதற்காக முத்துப்பாண்டி வைத்து செல்வது குறிப்பிடத்தக்கது.