அழகிப் பட்டம் - ராணுவம்.., யார் இந்த காஷிஷ் மெத்வானி?
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள உல்லாஸ்நகரை சேர்ந்த காஷிஷ் மெத்வானி, 2002 ஜனவரி 9 அன்று பிறந்தவர்.
விஞ்ஞானியான தந்தை மற்றும் பள்ளி ஆசிரியையான தாயின் மகளான இவர், சிறுவயதிலிருந்தே மிஸ் இந்தியா ஆகவும், தேச சேவை செய்யவும் கனவு கொண்டிருந்தார்.
படிப்பில் சிறந்து விளங்கிய அவர், புனே பல்கலைக்கழகத்தில் உயிரித்தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
பின்னர் பெங்களூரில் இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) நரம்பியல் துறையில் ஆராய்ச்சி செய்தார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட வாய்ப்பு கிடைத்தும், அதை நிராகரித்து தனது கனவுகளைத் தேர்ந்தெடுத்தார்.
பரதநாட்டியம், தபலா, துப்பாக்கிச் சுடுதல், கூடைப்பந்து போன்றவற்றிலும் திறமை காட்டிய அவர், கொரோனா காலத்தில் இரத்தம் மற்றும் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் தன்னார்வ அமைப்பை தொடங்கினார்.
2023ஆம் ஆண்டு மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா பட்டம் வென்றார். தொடர்ந்து 2024 CDS தேர்வில் அகில இந்திய அளவில் 2வது இடம் பெற்றார்.
சென்னையில் உள்ள ஆபிஸர்ஸ் பயிற்சி அகாடமியில் பயிற்சி முடித்த அவர், கடந்த செப்டம்பர் 6 அன்று இந்திய ராணுவத்தில் லெப்டினன்டாக நியமிக்கப்பட்டு தற்போது வான் பாதுகாப்புப் படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.