மதுபோதையில் தகராறு: இளைஞரை உயிரோடு புதைத்த நண்பர்கள்

crime thoothukudi
By Petchi Avudaiappan Aug 25, 2021 04:19 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரோடு மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் கிருஷ்ணாநகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் அஜித்குமார் என்பவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவர் செல்போன் வாங்குவதற்காக தனது நண்பரான தேவ ஆசீர்வாதத்திடம் ரூ.5 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் பணத்தை அஜித்குமார் தனது நண்பர்களான தேவ ஆசீர்வாதம், தர்ம முனியசாமி, இசக்கி மணி ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி செலவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே முத்தையாபுரத்தில் உப்பளம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது தேவ ஆசீர்வாதம் தான் கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

அதற்கு அஜித்குமார் பணத்தை அனைவரும் சேர்ந்துதான் மது குடித்து செலவழித்தோம். எனவே நான் மட்டும் எப்படி திருப்பி தர முடியும் என கேட்க அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் அஜித்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் அவரை உயிரோடு புதைக்க முடிவு செய்த 3 பேரும் அங்கிருந்த குழியில் தள்ளி மண்ணைப் போட்டு மூடியுள்ளனர். மார்பு வரை புதைக்கப்பட்ட நிலையில் அஜித்குமார் கூச்சலிடவே அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அங்கு வந்து அவரை குழியில் இருந்து மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அஜித் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேவ ஆசீர்வாதம், தர்ம முனியசாமி, இசக்கி மணி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.