பிரபல நடிகர் பெயரில் பேக் ஐடி - கோடீஸ்வர கணவரை விவாகரத்து செய்த பெண்
பிரபல நடிகர் பெயரில் வந்த பேக் ஐடியை நம்பி பெண் ஒருவர் கணவரை விவாகரத்து செய்ததோடு 7 கோடி பணத்தை இழந்துள்ளார்.
பிராட் பிட்
ஹாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் பிராட் பிட்(Brad Pitt). இவர் முன்னதாக பிரபல நடிகைகள் ஜெனிபர் அனிஸ்டன் மற்றும் ஏஞ்சலினா ஜோலி ஆகியோரை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டார்.
தற்போது நகை வடிவமைப்பாளரான Ines de Ramon என்ற பெண்ணை 2022 ஆம் ஆண்டு முதல் டேட்டிங் செய்து வருகிறார். இந்நிலையில் பிராட் பிட் பெயரில் வந்த பேக் ஐடியால் பெண் ஒருவர் ரூ.7 கோடியை இழந்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பேக் ஐடி
பிரான்ஸை சேர்ந்த 53 வயதான ஆன்(Anne) என்ற பெண்மணி இது தொடர்பாக TF1 என்ற சேனலில் ஒளிபரப்பாகும் "Sept à huit" என்ற நிகழ்வில் பேசியுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு, இன்ஸ்டாகிராமில் பிராட் பிட்டின் தாய் Jane Etta Pitt பெயரில் உள்ள போலி கணக்கு ஒன்றில் இருந்து இவருக்கு மெசேஜ் வந்துள்ளது. தொடர்ந்து மறுநாளே பிராட் பிட் பெயரில் உள்ள பேக் ஐடியில் இருந்து மெசேஜ் வந்துள்ளது.
ஆன் பலமுறை இன்ஸ்டாகிராமில் அவருக்கு கால் செய்த போதும் அந்த நபர் அழைப்பை ஏற்கவில்லை. மாறாக, AI தொழில்நுட்பத்தின் உதவியால் பிராட் பிட் போன்ற புகைப்படங்களை உருவாக்கி, அதை ஆனுக்கு அனுப்பி, அவர் உண்மையான பிராட் பிட் என நம்ப வைத்துள்ளார். மேலும் ஆனுடன் அன்பாக பேசி அவரை காதல் வயப்படுத்தியுள்ளார்.
கணவருடன் விவாகரத்து
தொடர்ந்து உனக்கு விலையுயர்ந்த பரிசு பொருள் ஒன்றை அனுப்பியுள்ளேன் அதற்கு 9000 யூரோ(இந்திய மதிப்பில் ரூ.8 லட்சம்) சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி பணம் பெற்றுள்ளார். ஆனால் பரிசுபொருள் வரவே இல்லை.
ஆனுக்கு ஏற்கனவே அவரை விட 19 வயது மூத்தவரான கோடீஸ்வரருடன் திருமணம் ஆகியுள்ளது. ஆனால் திருமண வாழ்க்கையில் சலிப்புடன் இருந்துள்ளார். இந்நிலையில் பேக் ஐடியில் உள்ள நபர் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியதையடுத்து தனது கோடீஸ்வர கணவரை விவகாரத்து செய்துள்ளார். இதன் மூலம் அவருக்கு ஜீவனாம்சமாக ரூ.7 கோடி வந்துள்ளது.
இந்நிலையில் பேக் ஐடியில் உள்ள நபர், தனக்கு சிறுநீரக புற்றுநோய் உள்ளது என்றும் அதற்கான சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. தற்போது ஏஞ்சலினா ஜோலியுடனான விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவதால் எனது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஏமாற்றம்
மேலும் AI தொழில்நுட்பத்தின் உதவியால் பிராட் பிட் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படங்களை உருவாக்கி அனுப்பியுள்ளார். இதனை நம்பிய ஆன் தனது வருங்கால கணவரான பிராட் பிட்டிற்கு பணம் அனுப்புவதாக நம்பி, அந்த 7 கோடியை பேக் ஐடி நபருக்கு வழங்கியுள்ளார்.
பின்னர், எதேச்சையாக பிராட் பிட் தான் தற்போது டேட்டிங் செய்து வரும் Ines de Ramon உடன் உள்ள புகைப்படத்தை பார்த்த போதுதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இந்த ஏமாற்றத்தால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு பிராட் பிட் பெயரிலான பேக் ஐடி மூலம் இரு பெண்களிடம் ரூ.3 கோடி மோசடி செய்த 5 நபர்களை ஸ்பானிஷ் காவல்துறை கைது செய்தது.