தேர்தல் களத்தில் பெண்களுக்கு இலவசங்கள் மட்டும்தானா ? களத்தில் இல்லையா?
இந்த முறை தமிழக தேர்தலில் 3.19 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர்.இதில் ஆண் வாக்காளர்களைவிடப் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது. பெண்களுடைய இந்த பத்து லட்சம் வாக்குகள் தான் தமிழகத்தை யார் ஆளப் போகின்றார்கள் என்பதை தீர்மானிக்கும் சத்தியாக உள்ளது.
அதனால் தான் இந்த முறை பெரும்பாலான கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆதரவான பல அதிரடியான அறிவிப்புகளை வாக்குறுதிகளாக அளித்துள்ளனர்.

அதே சமயம் இலவச பொருட்களை வழங்குவதில் உள்ள சிறப்பம்சங்கள், தேர்தல் களத்தில் உள்ள பெண்களுக்கு வழங்கபட்டதா என்றால் சந்தேகம் என்றுதான் கூற வேண்டும் தேர்தலில் பெண் வாக்காளர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள், தங்கள் கட்சிகளில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களை ஒதுக்கியுள்ளது வெறும் ஒற்றை சதவீதம் என்றே கூறலாம்.
இதில் தமிழகத்தின் பிராதன கட்சிகளும் அடங்கும்அதிமுக இந்த முறை தேர்தலில் 15 பெண் வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளது. கடந்த முறை தொழில்துறை அமைச்சராக இருந்த நிலோஃபர் கபிலுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலமையில் அதிமுக ஆட்சி அமைத்தபோது , சட்டப்பேரவையில் பெண்களின் எண்ணிக்கை 17 ஆக இருந்தது. அதே போல் 2016-ஆம் ஆண்டு 24 உயர்ந்திருந்தது . அதே போல் திமுகவிலும் போட்டியிடும் 173 தொகுதிகளில் 12 பெண்கள் வேட்பாளர்கள் முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டனர்.
பின்னர் ஆத்தூர் தனி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜீவா ஸ்டாலின் மாற்றப்பட்டு அத்தொகுதியில் கு.சின்னத்துரை வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதனால் திமுகவில் நிறுத்தப்பட்ட பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ளது. பாஜக சார்பில் குஷ்பு, வானதி, சி.கே.சரஸ்வதி என 3 பெண் வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடுகிறார்கள். பாமக சார்பில் திலகபாமா மட்டுமே போட்டியிடுகிறார். தேமுதிகவில விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் உட்பட 7 பெண்கள் மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
அமமுக 14 வேட்பாளர்கள் களத்தில் நிறுத்தியுள்ளனர். காங்கிரஸ் சார்பில் விளவங்கோடு தொகுதியில் மட்டும் விஜயதாரணி நிறுத்தப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் பொது தொகுதியில் மாதர் சங்க தலைவர் பொன்னுத்தாய் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் 234 தொகுதிகளில் 117 பெண் வேட்பாளர்களுக்கு சமவாய்ப்பு வழங்கியுள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் குறைந்த எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தியது மட்டுமல்லாமல் அவர்களில் பெரும்பாலோனோர் 46 தனி தொகுதிகளில்தான் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது இங்கு கவனிக்கப்படவேண்டியது.
அதேபோல் மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட முக்கியமான அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் ஒரு பெண் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை.
தமிழக சட்டப்பேரவையில் தற்போது வரை பெண்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை எட்டவில்லை.
உள்ளாட்சித் துறைகளில் பெண்கள் 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டாலும் அவர்கள் சுதந்திரமாகச் செயல்படுகிறார்களா என்பது சந்தேகம் தான்.
தற்போது வளரும் இந்தியாவில் பெண்களுக்கு தேவை இலவச அறிவிப்புகள் அல்ல , அரசியல் களத்தில் சமபங்கு உரிமை கொடுக்கப்படவேண்டும் எனபதுதான் முக்கியமானதாகும்.