தக்காளிக்கு பவுன்சர் பாதுகாப்பு; ஸ்மார்ட்போனுக்கு தக்காளி இலவசம் - விநோத வியாபாரிகள் !
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தக்காளி விலை உயர்வு காரணமாக வடமாநிலத்தவர்கள் விநோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தக்காளி விலை உயர்வு
கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் தக்காளி 100 முதல் 150 வரை விற்கப்படுகிறது. தொடர்மழை காரணமாக தக்காளி சாகுபடி குறைந்ததால் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. வட மாநிலங்களில் தக்காளி 250 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தக்காளி விலை ஏற்றம் காரணமாக சில விநோத செயல்களும் அரங்கேறி வருகிறது.
செல்போனுக்கு தக்காளி இலவசம்
மத்தியப்பிரதேச மாநிலம் அசோக் நகர் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் செல்போன் விற்பனை கடை ஒன்று ஸ்மார்ட்போன் வாங்கினால் 2 கிலோ தக்காளி இலவசம் என்று அறிவித்தது.
இதனை அறிந்த அந்த பகுதியில் உள்ள மற்ற கடைகளும் ஸ்மார்ட்போன் வாங்கினாள் தக்காளி இலவசம் என்று அறிவித்துள்ளது. ஸ்மார்ட் போன் விலை அளவுக்கு தக்காளியின் விலையும் அதிகரித்துள்ளதால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தக்காளிக்கு பவுன்சர்ஸ்
உத்திர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் அஜய் ஃபாஜி என்ற காய்கறி வியாபாரி தனது கடைக்கு தக்காளியை பாதுகாப்பதற்காக பவுன்சர்களை நியமித்துள்ளார். அந்த பகுதிகளில் தக்காளி ரூ. 160 மேல் விற்கப்படுவதால் நல்ல தக்காளிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால் தக்காளியை பதம் பார்த்து பொறுக்குவோர், பேரம் பேசுவோர், ஓரிரு தக்காளியை திருடிச் செல்வோர் என எழுந்த பிரச்சினைகளை சமாளிக்கத்தான் பவுன்சர்களை நியமித்திருக்கிறேன் என அஜய் ஃபாஜி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது