ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 செம்மறி ஆடுகள் - தமிழக அரசு அறிவிப்பு
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம் தொடரும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் இலவசமாக ஆடு, மாடு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக கிராமப்புறத்தில் உள்ள கால்நடை வளர்ப்பை சார்ந்துள்ள 50%க்கும் அதிகமான மக்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. குறிப்பாக இதன் மூலம் கிராமப்புற ஏழை பெண்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
அதேசமயம் சொந்தமாக ஆடு, மாடுகள் வைத்திருப்பவர்கள் மற்றும் அரசு பணியில் இருப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற இயலாது என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனிடையே சட்டசபையில் இன்று பேசிய தமிழ்நாடு கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை தாக்கல் செய்தார்.
அதில் முந்தைய அரசின் கால்நடை வழங்கும் திட்டம் தொடரும் என்றும், ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, ஆதரவற்ற பெண்களுக்குத் தலா 5 செம்மறி/வெள்ளாடுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதன்மூலம் 38,800 பெண்களுக்கு ரூ. 75.63 கோடியில் 100% மானியத்தில் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.