திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு வெளியானது மகிழ்ச்சியான அறிவிப்பு - நோட் பண்ணுங்க...!
திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் மீண்டும் நேரடியாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகின் பணக்கார கடவுள்களில் ஒருவராக அறியப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏராளமான வேண்டுதல்களோடும், நம்பிக்கையோடும் தரிசனம் செய்வது வழக்கம்.
ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ரூ.300 சிறப்பு கட்டண தரிசனம், இலவச தரிசனம் ஆகியவற்றுக்கு ஆன்லைன் மூலமாகவே டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது.
இதனிடையே பிப்ரவரி மாதத்திற்கான ரூ.300 சிறப்பு கட்டண தரிசனம் டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களிலேயே நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 28 நாட்களுக்கு 3.36 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதேபோல் தினசரி 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மொத்தம் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் இலவசமாக முன்பதிவு செய்யப்பட்டன.
இலவச தரிசனத்துக்கு பிப்ரவரி மாதம் முழுவதும் ஆன்லைன் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மட்டுமே டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பிறகு பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் மீண்டும் நேரடியாக வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.