மாணவ,மாணவிகளுக்கு அடித்த ஜாக்பாட் - தேர்தல் அறிக்கையில் இலவச எலக்ட்ரிக் ஸ்கூட்டர்,ஸ்மார்ட் போன்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் வரவுள்ளது.

இதையொட்டி பல்வேறு வியூகங்களை வகுத்து காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும்,

உத்தரப் பிரதேச மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வருகிறார்.

தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு பிரச்சாரக் களமாகவும் பயன்படுத்தி கொள்கிறார்.

அந்த வகையில் உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் 40 சதவீத இடங்கள் பெண்களுக்கு வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் தேர்தலில் வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவசங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதாவது, 12ஆம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு ஸ்மார்ட்போனும், பட்டதாரி பெண்களுக்கு எலக்ட்ரானிக் ஸ்கூட்டரும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி, நேற்றைய தினம் சில மாணவிகளை சந்திக்க நேர்ந்தது.

அவர்கள் படிப்பதற்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஸ்மார்ட்போன்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று என்னிடம் வலியுறுத்தினர்.

இந்த விஷயம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 12ஆம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்களும், பட்டதாரி மாணவிகளுக்கு எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்களும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

எனவே பெண்களின் நிலையை உயர்த்த, ஒன்றுபட்டு வாழ்வதை உறுதி செய்ய, சாதி மற்றும் மதம் ரீதியான பிரிவினைகளை தவிர்க்க,

நீதி கிடைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் பிரியங்கா காந்தி செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மாநில பாஜக துணைத் தலைவரும், மேலவை உறுப்பினருமான விஜய் பதக் கூறுகையில், 2022 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே இத்தகைய பொய்யான வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்து வருகிறது.

ஆனால் இதனை நிறைவேற்ற மாட்டார்கள். ஏனெனில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறி விட்டு வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றியதை மறந்துவிடாதீர்கள்.

மேலும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதையும் மக்கள் நன்றாக அறிவார்கள் என்று கூறினார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்