முதலமைச்சர் மருமகன் சபரீசன் பெயரை சொல்லி ரூ.77 லட்சம் மோசடி - திமுக நிர்வாகி புகார்
தமிழக முதலமைச்சர் மருமகன் சபரீசனின் பெயரை சொல்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி வாங்கி தருவதாக கூறி 77 லட்சம் மோசடி செய்ததாக திமுக ஊராட்சி மன்ற தலைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ரூ.77 லட்சம் மோசடி
திருப்புத்தூர் மாவட்டம் நரியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாரதி. திமுக ஊராட்சி மன்ற தலைவரான பாரதி கடந்த 10 ஆண்டுகள் அதே பகுதியில் திமுக கவுன்சிலராகவும் பதவி வகித்தவர்.
இந்நிலையில் பாரதியிடம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி வாங்கி தருவதாக கூறி புவனேஷ் என்ற சரவணன் மற்றும் கடந்த மாதம் கைதான போலி ஐஏஎஸ் சசிகுமார் ஆகியோர் 77 லட்ச ரூபாய் பணம் வாங்கி கொண்டு திட்டமிட்டு மோசடி செய்து ஏமாற்றியதாக திமுக முன்னாள் கவுன்சிலர் பாரதி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாரதி, திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறேன்.
முன்னர் திமுகவில் எம்எல்ஏ சீட்டு கேட்டு முயற்சி செய்த போது சீட் கிடைக்கவில்லை என கூறினார். அதன் பிறகு வேலூர் மாவட்டத்தில் ஹோட்டல் நடத்திவரும் அதிமுகவை சேர்ந்த பாலச்சந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டு, அவர் மூலமாக புவனேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் அறிமுகமானார்.
அப்போது அவர்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி காலியாக இருப்பதாகவும், அதனை தனக்கு வாங்கி தருவதாகவும் ஆசைவார்த்தை கூறியதுடன் இந்த பதவிக்கு ஒரு கோடி ரூபாய் செலவாகும் என தெரிவித்தனர்.
இதனை ஒப்புக்கொண்டு முதல் தவணையாக 34 லட்ச ரூபாயை சென்னை ஹோட்டலில் வைத்து புவனேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமியிடம் கொடுத்தேன்.
இதற்கிடையே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியை வாங்கி ஐஏஎஸ் சசிகுமார் என்பவர் வாங்கி தருவதாக கூறி அவரை அறிமுகம் செய்து வைத்தனர்.
பின்னர் டெல்லியில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் சசிகுமாரை சந்தித்து 43 லட்சம் கொடுத்ததாக தெரிவித்தார். மொத்தம் 77 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்ட பின்னர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தான் இந்த பதவியை போட உள்ளதாக அவர்கள் கூறினர்.
அவர்களை சந்திக்கும் போதெல்லாம் பாண்டிச்சேரி முதலமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எடுத்த புகைப்படத்தை காண்பித்தனர்.
பல மாதங்கள் ஆகியும் அவர்கள் கூறியது போல் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியை வாங்கி தராமல் இழுத்தடித்தால் பணத்தை திருப்பிக் கேட்டபோது பணம் தர முடியாது என கொலை மிரட்டல் விடுத்தனர்.
அதன் பிறகு அவர்களை பற்றி விசாரித்த போது போலி ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார் மோசடி வழக்கில் சிறையில் இருப்பதும் தனக்கு தெரியவந்தது.
இதனால் இழந்த பணத்தை மீட்டு கொடுக்கும் படி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்" என்று தெரிவித்தார்.