ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்கிய பிரான்ஸ் - அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள்
தங்களுக்கு ஆயுத உதவிகளை பிரான்ஸ் வழங்கியிருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 3 நாட்களாக போர் தொடுத்து வருகிறது.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்கள் பலியாகியுள்ளனர். உக்ரைனும் தங்கள் நாட்டைக் காக்க பதிலடி கொடுத்து வருவதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.

இதற்கிடையில் நேட்டோ கூட்டமைப்பில் உள்ள சில நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடை விதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்த நிலையில், சில நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனால் நேரடியாக எந்த நாடும் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளையோ, படைகளையோ அனுப்பவில்லை.
அதேசமயம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பொருளாதாரத் தடைகளைத் தாண்டி உலக நாடுகள் ஏதேனும் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே ஸ்வீடன் அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளை வழங்க முன்வந்திருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்த நிலையில் தற்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது ரஷ்யாவிற்கு எதிரான போரில் பிரான்ஸ் தங்கள் நாட்டிற்கு உதவ முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் இருந்து ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் தங்கள் நாட்டிற்கு வந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ரஷ்ய நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று நூற்றுக்கணக்கான கார்களை ஏற்றிக்கொண்டு பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் ஆங்கில கால்வாய் வழியாக சென்று கொண்டிருந்தது.
அதனை இடைமறித்து நிறுத்திய பிரான்ஸ் கடற்படை கப்பலை பறிமுதல் செய்து பவுலோன்-சுர்-மெர் நகர துறைமுகத்துக்கு கொண்டு சென்றது. இதற்கு பிரான்ஸில் உள்ள ரஷ்ய தூதரகம் விளக்கம் கேட்க ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள பொருளாதார தடைகளுக்கு ஏற்ப கப்பல் பறிமுதல் செய்யப்பட்டதாக பிரான்ஸ் விளக்கம் அளித்துள்ளது.