மேற்கு வங்கத்தில் நான்கு பேர் சுட்டுக் கொலை - மமதாவை குற்றம்சாட்டிய பிரதமர் மோடி
தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் மேற்கு வங்கத்தில் இன்னும் ஐந்து கட்ட தேர்தல் நடைபெற உள்ளன. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும் பாரதிய ஜனதா கட்சியும் நேரடியாக மோதி வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் கூச் பெகர் எனும் இடத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் நான்கு முஸ்லிம் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் கடும் சர்ச்சையாக வெடித்துள்ளது. மத்திய அரசையும் தேர்தல் ஆணையத்தையும் மமதா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இந்தத் தாக்குதலுக்கு மமதா பானர்ஜியை குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “நான்கு பேரின் மரணம் என்னை கவலை கொள்ளச் செய்கிறது. அதே சமயம் இதற்கு மமதா பானர்ஜியும் அவரின் வாக்கு வங்கி அரசியலும் தான் காரணம். உங்களின் நேரம் முடிந்துவிட்டது. பாஜக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
உங்களின் வாக்கு வங்கி அரசியல் இனியும் எடுபடாது. அதனால் இந்தப் பகுதி கடும் பின்னடைவைத் தான் சந்தித்துள்ளது” என்றார்.
கோச் பெகர் தாக்குதலை மமதா பானர்ஜிக்கு எதிராக பயன்படுத்த பாஜக முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.