நிலப்பிரச்சனையில் மனைவி, மகன், மகள்களை எரித்துக் கொன்ற கொடூர தந்தை
இடுக்கியில் நிலத்தகராறு காரணமாக மனைவி, மகன், மகள்கள் என 4 பேரை வீட்டுக்குள் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார்.
தமிழக, கேரள எல்லையான இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே சீனிக்குழி கிராமத்தில் ஹமீது என்பவர் மனைவி ஷீபா, மகன் ஃபைசல், மகள்கள் மெஹர், அஸ்னா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். ஹமீதுக்கும் அவரது மகன் ஃபைசலுக்கும் இடையே சில மாதங்களாகவே நிலத் தகறாறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தந்தை ஹமீது தனக்கு சொந்தமான 72 செண்ட் நிலத்தில் விவசாயம் செய்து கொள்ளுமாறு மகன் ஃபைசலிடம் தெரிவித்ததோடு தனது நிலத்தை ஃபைசல் பெயருக்கு பட்டா மாறுதலும் செய்துள்ளார். ஆனால் விவசாயத்தில் நாட்டமில்லாத ஃபைசல் அதனை சரிவர செய்யாததால் ஒருகட்டத்தில் அதிருப்தியடைந்து ஹமீது நிலத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.
இதற்கு நிலத்தை திருப்பித் தர மறுத்த ஃபைசல் மறுக்கவே இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குடும்பமே தேவையில்லை என முடிவு செய்த ஹமீது நேற்று அதிகாலை நேரம் எழுந்து மகன் ஃபைசல், அவரது மனைவி ஷீபா, மகள்கள் மெஹர், அஸ்னா ஆகியோர் நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை அறிந்து யாரும் வெளியில் சென்று விடாதவாறு அனைத்து கதவுகளையும் பூட்டிவிட்டு வெளியே வந்துள்ளார்.
பின்னர் தான் தயாராக வைத்திருந்த பெட்ரோலை கதவு இடைவெளி வழியே வீட்டுக்குள் ஊற்றி தீ வைத்துள்ளார். இதையடுத்து வீட்டிற்குள் தீ பரவியதை உணர்ந்த நால்வரும் வெளியே வர முயற்சித்துள்ளனர். ஆனால் கதவுகள் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியே கூக்குரல் இட்டும் தங்களை காப்பாற்றுமாறு கதறியுள்ளனர்.
ஆனால் வெளியே நின்றிருந்த தந்தை ஹமீது உதவி செய்ய வருபவர்களையும் தீ வைத்து கொன்றுவிடுவேன் என தான் மீதம் வைத்திருக்கும் பெட்ரோல் பாட்டிலை காட்டி மிரட்டியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இடுக்கி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் வீட்டிற்குள் சிக்கிய நால்வரும் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து ஹமீது அப்பகுதி போலீசாரால் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் நிலத்தகராறு காரணமாக குடும்பத்தை தீயிட்டுக் கொளுத்தியதை ஹமீது ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.