தொழிற்சாலையை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது
திமுக பிரமுகரை தாக்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் சென்னை ராயபுரத்தில் உள்ள 49வது வார்டில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் திமுகவினர் சிலர் கள்ள ஓட்டுப் போட முயன்றதாக அதிமுகவினர் குற்றம் சாட்டினர்.
அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அங்கு வர கள்ள ஓட்டுப் போட்டுவிட்டுத் தப்ப முயன்றதாகக் கூறி ஒருவரைப் பிடித்து அதிமுகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த நபரின் சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக்கி ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் இழுத்து சென்றனர்.
இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலான நிலையில் திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் தண்டையார்பேட்டை போலீசாரிடம் அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜாமீன் கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து ஜெயக்குமார் தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் கைதாகி சில நாட்களே ஆனதாலும், விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதாலும் ஜாமீன் வழங்க முடியாது என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 8 கிரவுண்டில் அமைந்த ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை மிரட்டி அபகரித்துக் கொண்டதாக மகேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.