ஒரே நேரத்தில் சாலையில் குவிந்த விவசாயிகள் - திணறிய போலீசார்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒரே நேரத்தில் ஒன்றுகூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேளாண் சட்டங்களைுக்கு எதிராக டெல்லி எல்லையில் கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற முடியாது என திட்டவட்டமாக கூறி வருகிறது.
அண்மையில் ஹரியானாவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது, அம்மாநில போலீசார் கடுமையான தடியடி நடத்தினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் விவசாயிகள் மகா பஞ்சாயத்து எனும் கூட்டத்தை நடத்தினர். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து, பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான விவாசாயிகள் அங்கு கூடினார்.
மேள, தாளங்கள் முழங்க விவசாயிகள் பேரணியாக சென்றதால், பல சாலைகளில் போக்குவரத்து முடங்கியது. இதனால், முசாபர்நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அத்தனை பேருக்கும் உணவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், விவசாயிகள் சங்கம் தரப்பிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஜிஐசி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில், போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும், ராகேஷ் திகாயத், யோகேந்திர யாதவ் உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.
உயிரே போனாலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, டெல்லி போராட்டக்களத்தில் இருந்து வெளியேற மாட்டோம் என்று விவசாயிகள் கூறியுள்ளனர். நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டம் 90 ஆண்டுகள் நீண்டதுபோல் தங்களது போராட்டமும், வெற்றி பெறும் வரை தொடரும் என தெரிவித்தனர்.