முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்.
மன்மோகன் சிங் மறைவு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்(92) இன்று(26.12.2024) அவரது இல்லத்தில் இருந்த போது திடீரென சுயநினைவை இழந்தார்.
அப்போதே அவருக்கு முதலுதவிகள் அளிக்கப்பட்டு, 8:06 மணிக்கு சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 9:51 மணிக்கு உயிரிழந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
படிப்பு
1932 செப்டம்பர் 26 ஆம் தேதி பஞ்சாபில் பிறந்த மன்மோகன் சிங், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர். அதன் பிறகு 1957 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார மேற்படிப்பை முடித்த அவர், 1962-ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டி.ஃபில் பட்டம் பெற்றார்.
பஞ்சாப பல்கலைகழகம் மற்றும் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் ஆசிரியராக பணியை தொடங்கிய இவர், 1971-ல் மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராக இணைந்தார். அடுத்த ஆண்டே நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி உயர்வு பெற்றார்.
பின்னர் ரிசர்வ் வங்கி கவர்னர், திட்டக் கமிஷன் துணைத் தலைவர், பல்கலைக்கழக மானியக் குழு தலைவர், பிரதமரின் பொருளாதார ஆலோசகர் என பல்வேறு பதவிகளை வகித்து வந்தார்.
அரசியல்
மன்மோகன் சிங் 1991, 1995, 2001,2007, 2013 ஆண்டுகளில் அசாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவிற்கு தேர்வு செய்யப்பட்டார். 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவிற்கு தேர்வு செய்யப்பட்டார். 1998 முதல் 2004 வரையிலான காலத்தில் ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார்.
ஒரு முறை மட்டும் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அவர் அதில் தோல்வியை தழுவினார். 1999 ஆம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அவர் அதில் தோல்வியடைந்தார்.
இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று கொண்டிருந்த பிவி நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் நிதி அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட மன்மோகன் சிங் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
பிரதமர் பதவி
2004 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்த போது சோனியா காந்தி பிரதமராக பதவி ஏற்க மறுத்த நிலையில், மன்மோகன் சிங் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
அதன் பிறகு 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்ற போது, தொடர்ந்து 2வது முறையாக இந்திய பிரதமராக பதவி ஏற்றார்.
திட்டங்கள்
ஆதார், தேசிய புலனாய்வு முகமை(NIA) ஆகியவை மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (100 நாள் வேலை திட்டம்), தகவல் அறியும் உரிமை சட்டம்(RTI), குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்(RTE), நிலம் கையகப்படுத்துதல் சட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகிய முக்கிய சட்டங்கள் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது.
மன்மோகன் சிங் மறைவிற்கு இந்திய பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் முகஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.