சசிகலாவை அனாதை ஆக்கியதே ஓ.பி.எஸ்.தான் : ஆர்.பி.உதயகுமார்
மகாராணிபோல் வாழ்ந்த சசிகலாவை சிறையில் தள்ளி அரசியல் அனாதை ஆக்கிய ஓ.பன்னீர்செல்வம், தற்போது அவருடன் கூட்டு வைக்கப்போவதாக கூறிவருகிறார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
குடும்ப சொத்தாக்க முயற்சி
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வை தனது குடும்ப சொத்தாக்க முயற்சி செய்து வருகிறார். அது ஒருபோதும் எடுபடாது.
சாதாரண பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சர் பதவிக்கு தேவைப்படும் போதெல்லாம் பரிந்துரை செய்த டி.டிவி.தினகரனை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த பன்னீர்செல்வம் அவர் மீது அபாண்ட பழி சுமத்தினார். மேலும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று குழப்பத்தை ஏற்படுத்தி அ.தி.மு.க.வின் பிரிவிற்கு பிள்ளையார் சுழி போட்டது அவர்தான்.

அவர் ஒழித்துகட்டியவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முதலமைச்சர் பதவி மீது அவர் கொண்ட ஆசையில் பல நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். தன்னை எதிர்ப்பவர்களை அடியோடு அழிப்பவர்தான் பன்னீர்செல்வம்.
அவர் மீண்டும் சசிகலாவை சந்திப்பேன் என்று கூறுகிறார். இதை கேட்டு சிரிப்பதா? அழுவதா? என்பது தெரியவில்லை. மகாராணிபோல் வாழ்ந்த சசிகலாவை சிறையில் தள்ளி அரசியல் அனாதை ஆக்கியவர் பன்னீர்செல்வம் தான் என்று கூறினார்.
கனவு பலிக்காது
இன்றைக்கு வெற்றி பெற்று வந்தவரை வேடன் விரிந்த வலையில் மாட்டிய மணிப்புறா போன்று நீங்கள் அவரை உங்கள் பக்கம் இழுத்துள்ளீர்கள். அ.தி.மு.க.வை உங்கள் குடும்ப சொத்தாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நான் இருக்கும் வரை அந்த கனவு பலிக்காது.
உங்கள் பணம் பாதாளம் வரை பாயட்டும்.அதனால் ஒன்றும் சாதிக்க முடியாது. இதுதான் உங்களுக்கு இறுதி அத்தியாயம். இனிமேல் உங்கள் போலி வேஷம், நரித்தனம் எடுப்படாது.
அ.தி.மு.க.வை பாதுகாக்க எடப்பாடியார் கடுமையாக போராடி வருகிறார். நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அரசியல் அடையாளம் இல்லாமல் அனாதையாக இருந்தபோது உங்களை அழைத்து துணை முதலமைச்சராக்கி அழகுபார்த்தவர் எடப்பாடி பழனிசாமி.
அவருக்கு உங்களால் எத்தனை கஷ்டங்கள், சோதனைகள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். உங்களின் உண்மை முகம் தெரிவதற்கு இன்னும் அதிக நாட்கள் ஆகாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.