திமுக நிர்வாகியை அரை நிர்வாணமாக்கிய புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கைது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது திமுக தொண்டரை தாக்கிஅரை நிர்வாணமாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று வாக்களித்தனர். நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை ராயபுரத்தில் உள்ள 49வது வார்டில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் திமுகவினர் சிலர் கள்ள ஓட்டுப் போட முயன்றதாக அதிமுகவினர் குற்றம் சாட்டினர். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அங்கு வர கள்ள ஓட்டுப் போட்டுவிட்டுத் தப்ப முயன்றதாகக் கூறி ஒருவரைப் பிடித்து அதிமுகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த நபரின் சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக்கி ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் இழுத்து சென்றனர். இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலான நிலையில் திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் தண்டையார்பேட்டை போலீசாரிடம் அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் அவர்கள் சட்டத்தைத் தன் கையிலே எடுத்துக்கொண்டு, திமுக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்தியிருக்கிறார். இதனைச் சட்டரீதியாக நிச்சயம் கழகம் எதிர்கொள்ளும். அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் என்பது நிச்சயம்’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தண்டையார்பேட்டை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல், கொலை மிரட்டல், ஆபாசமாகத் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.