துபாய் சென்று என்ன கிழிக்கப் போகிறார்? - முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்
துபாய் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சரமாரியாக விமர்சித்துள்ளார்.
துபாயில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி உலக எக்ஸ்போ கண்காட்சி தொடங்கியது. அந்த கண்காட்சி மார்ச் 31 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த கண்காட்சியில் தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மார்ச் 25 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துபாய் உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாடு வார நிகழ்வுகளை தொடங்கிவைத்து தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று துபாய் புறப்பட்டுச் சென்றார்.
இதனிடையே திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரிடம் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ஏற்கனவே அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்களும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை கொண்டு வந்தனர்.
அது எவ்வளவு தொகைக்கான முதலீடு என்று வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டு அது செயல்பாட்டில் இருக்கும் நிலையில், ஸ்டாலின் துபாய் போய் என்ன கிழிக்கப் போகிறார் என்பதை பார்க்கலாம் என வரம்பு மீறி சரமாரியாக விமர்சித்தார். மேலும் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு அரசுமுறை பயணமாக போனாரா இல்லை, சொந்த விஷயமாக போனாரா என்பது கடவுளுக்கே வெளிச்சம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.