தமிழகமே சீரழியும் போது ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்துகிறார் : கொந்தளித்த ஜெயக்குமார்

ADMK DMK D. Jayakumar
By Irumporai Aug 21, 2022 10:43 AM GMT
Report

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி விசாரித்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் ரகசிய அறிக்கை , frontlineindia இதழுக்கு எப்படி கிடைத்தது என முன்னள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்விஎழுப்பியுள்ளார்

ஜெயக்குமார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், பள்ளி, கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் பலாத்காரம், அவர்களின் மர்ம மரணங்கள் கடந்த 15 மாத தி.மு.க. ஆட்சியில் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

மதி மயங்கி கிடக்கும் முதலமைச்சர்

ரோம் நகரம் பற்றி எரியும்போது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தது போல்", தமிழகம் சீரழிந்து போன நிலையில் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

நாட்டிலேயே சிறந்த முதல்வர் இவர்தான் என்று கூலிக்கு மாரடிக்கும் ஜால்ராக்களை வைத்து கூவச்சொல்லி அதைக் கேட்டு புளங்காகிதம் அடைந்து மதி மயங்கி கிடக்கிறார்.  

தற்போது நாட்டில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களையும் கண்டு கொதிப்படைந்துபோய் உள்ள மக்களை திசை திருப்ப அருணா ஜெகதீசன் கமிஷன் அறிக்கை வெளியீடு என்ற ஒரு நாடகத்தை திரு. ஸ்டாலின் அரங்கேற்றி இருக்கிறார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க 2018-ல் மாண்புமிகு அம்மாவின் அரசுதான் ஆணையம் அமைத்தது. அதே நேரத்தில், இந்த சம்பவம் குறித்து CBI-ம் விசாரித்து வருகிறது.

ஆணையத்தின் இறுதி அறிக்கை கடந்த மே மாதமே சீல் இடப்பட்ட உறையில் வைத்து ரகசிய அறிக்கையாக இந்த விடியா அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை 3,000 பக்கங்களைக் கொண்டது என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த அறிக்கையில் என்ன பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று யாருக்கும் தெரியாது. இந்த அரசும் இதுவரை வெளியிடவில்லை.

அருணா ஜெகதீசன் அறிக்கையில் என்னென்ன உள்ளது என்பது பற்றி ஒரு ஆங்கில மாதம் இருமுறை (Front Line)ஏடு வெளியிட்டுள்ளது. இதை வைத்துக்கொண்டு ஊடகங்கள் தேவையற்ற விவாதங்களை கட்டமைத்து வருகின்றன.

எப்படி கிடைத்தது

அரசிடம் உள்ள ரகசிய ஆவணம் ஒன்று, அந்த ஆங்கில ஏட்டினருக்கு எப்படிக் கிடைத்தது? அந்த ஆங்கில ஏட்டிற்கு ஆட்சியாளர்களே தகவலைக் கசியவிட்டார்களா? அல்லது அரசு ரகசியத்தைக் காக்க முடியாத இந்த துப்புக் கெட்ட அரசின் கையாலாகாத்தனமா ? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழகமே சீரழியும் போது ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்துகிறார் : கொந்தளித்த ஜெயக்குமார் | Former Minister Jayakumar Cm Stalin

தற்போது, தமிழகத்தில் நடக்கும் கொள்ளைகளிலும், திருட்டுகளிலும் அரசின் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினரே ஈடுபட்டுள்ளது அம்பலமாகி வருகிறது, அரும்பாக்கம் தனியார் வங்கிக் கொள்ளையில் அச்சிறுப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கே தொடர்பு இருப்பது வெளிச்சமாகியுள்ளது.

அரசின் கையாலாகாத்தனமா

அதே போல், அருணா ஜெகதீசன் அறிக்கையை அந்த ஆங்கில ஏட்டாளர்களும், ஆட்சியாளர்களும் இணைந்தே பாதுகாப்பு மிகுந்த தலைமைச் செயலகத்தில் இருந்து திருடிச் சென்றார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

மேலும், அந்த ஆங்கில இதழைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சரின் குடும்ப உறவினர்கள். இந்த உறவு பாசத்திற்காக, அரசிடம் இருந்த ரகசிய ஆவணத்தையும், ரகசிய காப்புப் பிரமாணத்தையும் காக்கத் தவறிய, இந்த மக்கள் ஏமாற்று அரசின் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.