முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது - அதிமுகவில் பரபரப்பு
கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது திமுகவினர் வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட்டதாக குற்றம் சாட்டி அதிமுகவினரும், பாஜகவினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில், தி.மு.க. பிரமுகரை அதிமுகவினர் தாக்கினர். பின்னர் அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக தகவல் வெளியானது.
இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட திமுக பிரமுகர் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரையடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்குப் பின் ஜெயக்குமாரை, பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, ஜெயக்குமாரை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயக்குமாரின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், அவர் மீது மேலும் ஒரு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.