கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் முன்னாள் அதிமுக அமைச்சர்..!!
கொரோனா பாதிப்பு காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா
கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் நாடு முழுவதும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் தொடங்கியுள்ளது.
23 பேருக்கு கொரோனா தொற்று கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது வரை 104 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிமுக அமைச்சர்
இந்நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டார்.
ரத்த பரிசோதனையில் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, தனிமைப்படுத்தப்பட்டு சிவி சண்முகத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக கூறப்படுகிறது.