பாஜகவில் ஐக்கியமாகும் முன்னாள் முதலமைச்சர் : பரபரப்பில் அரசியல் கட்சிகள்
காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருந்த அம்ரீந்தர் சிங், அக்கட்சியிலிருந்து விலகிய நிலையில் தற்போது பாஜகவில் இணைய உள்ளார்.
அம்ரீந்தர் சிங்
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரான கேப்டன் அம்ரீந்தர் சிங் தனது புதிய கட்சியை பாஜகவுடன் இன்று இணைக்க உள்ளார். இன்று மாலை 4.30 அளவில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் அவர் தொடங்கிய பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை இணைக்கிறார்.

இந்த இணைப்பு விழாவில் அமரீந்தர் சிங்குடன் அவரது ஆதரவாளர்களான ஏழு முன்னாள் எம்எல்ஏக்கள், ஒரு முன்னாள் எம்பி ஆகியோரும் பாஜகவில் இணையவுள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் உற்ற தோழரான அம்ரீந்தர் சிங், ராஜீவின் அழைப்பால் 1980களில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
கங்கிரஸ் கட்சியிலிருந்து விலகல்
1980ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினரான அம்ரீந்தர், சீக்கியர்களின் புனித இடமான தங்கக் கோயிலில் இந்திரா காந்தி நடத்திய ஆப்ரேஷன் புளு ஸ்டாருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
பின்னர் சிரோமணி அகாலிதளத்தில் இணைந்த அவர் மாநில அமைச்சரவையில் அங்கம் வகித்தார். 1992ஆம் ஆண்டில் சிரோமணி அகாலி தளத்தில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கிய அம்ரீந்தர், 1998ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இனைந்து கொண்டார்.
அப்போது அவரது நண்பரின் மனைவியான சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு வந்தார். பின்னர் 2002ஆம் ஆண்டு பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த நிலையில், மாநிலத்தின் முதலமைச்சரானார் அம்ரீந்தர் சிங்.
பாஜகவில் இணையும் அகாலிதளம்
2007ஆம் ஆண்டு சிரோமணி அகாலிதளம் மீண்டும் ஆட்சியை பிடித்ததால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த அவர், 2017ஆம் ஆண்டு தேர்தலை வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சரானார்.
இவரது இரண்டாவது ஆட்சி காலத்தில் நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சிக்கு நுழைந்து மேலிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். இவருக்கும் சித்துவுக்கு பனிப்போர் நிலவி வந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார்.

பின்னர் மேலிடத்தின் அழுத்தம் காரணமாக 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அம்ரீந்தர் சிங், அக்டோபர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பின்னர் தனிக் கட்சி தொடங்கி தற்போது பாஜகவில் இணைந்தார்.
இந்த நிகழ்வு அரசியல் கட்சியினரிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.