கள்ளக்குறிச்சி வழக்கு; சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் விரைந்து விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு வழக்கு
கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அவரது தந்தை தாக்கல் செய்த மனுவில் நியாயமான விசாரணை நடத்தவும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நீதிபதி சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
3 அறிக்கைகள் தாக்கல்
தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது அலி ஜின்னா ஆஜராகி 3 அறிக்கைகளை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் ஒன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யபட்டது.
அதில் ஒன்று மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க 800 நடமாடும் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது அறிக்கையில் சிறப்பு புலனாய்வு குழு மேற்கொண்டு வரும் விசாரணை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாணவி மரணம் தொடர்பாக வதந்தி பரபரப்பியதாக 53 யூடியூப் லிங்குகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும், 7 ட்விட்டர் கணக்குகளும், 21 பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
மேலும் வதந்தி பரப்பியதாக 3 வாட்ஸ் அப் குழுக்களின் அட்மின்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், கலவரம் தொடர்பாக 63 போலீசார் உட்பட 202 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாணவியின் மரணம் தொடர்பான வழக்கில் விரைந்து விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டப்பட்டது.