ஹேப்பி நியூஸ்..நவ.8-முதல் வெளிநாட்டினா் அமெரிக்கா வர அனுமதி
வெளிநாட்டினா் நவம்பா் 8-ஆம் தேதி முதல் அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவா் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை தொடா்ந்து பல்வேறு நாடுகள் வெளிநாட்டினர் தங்கள் நாட்டுக்கு வர அனுமதி மறுத்தது. இதை தொடர்ந்து கொரோனா தொற்றால் கடும் பாதிப்படைந்த அமெரிக்காவும் வெளிநாட்டினா் வரத் தடை விதித்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி புதிய பயணக் கொள்கையை அந்நாட்டு அரசு வெளியிட்டது. அதன்படி, அமெரிக்கா அல்லது உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவா்கள் அந்நாட்டுக்கு வர அனுமதிக்கப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடா்ந்து வெள்ளை மாளிகையின் உதவி ஊடகச் செயலா் கெவின் முனோஸ் சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில்,
''கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்ட வெளிநாட்டினா் நவம்பா் 8-ஆம் தேதி முதல் அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவா்.
இந்த அறிவிப்பு வான்வழியுடன் தரைவழியாக மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கும் பொருந்தும்'' என்று தெரிவித்தாா்.
இந்த அறிவிப்பின் மூலம் இந்தியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சோந்தவா்கள் அமெரிக்காவிற்கு பயணிக்க இருந்த கட்டுப்பாடுகள் நீக்கபட்டுள்ளன.