பாம்பு ஆன்மா விட்ட சாபமா? 8 வருடமாக பாம்பு போல் தோல் உரியும் சிறுவன் - நிலைகுறைந்து நிற்கும் பெற்றோர்
8 வயதுடைய சிறுவனுக்கு பாம்பு போல தோல் உரியும் சம்பவம் பெரும் சோகத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம், தொட்டனம்பட்டியைச் சேர்ந்தவர் பிரேம் குமார். இவரின் மனைவி ஜெயசித்ரா. இவர்களுக்கு 11 வயதில் மகளும், 8 வயதில் பொன்குமரன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில், சிறுவன் பொன்குமரன் பிறக்கும் போதே தோல் நோய் பாதிப்புடன் பிறந்திருக்கிறார். அச்சிறுவனுக்கு தலை முதல் கால் வரை பாம்பு தோல் போல் தோலானது உதிர்ந்துகொண்டே இருக்கிறது.
மேலும், உடல் சத்துக் குறைபாடு உள்ளதால், 8 வயதானாலும் அவன் பார்ப்பதற்கு 3 வயது சிறுவனுக்குரிய உடல் வளர்ச்சியுடன் காணப்படுகிறான். இதனால் தனியாக வெளியில் நடமாட முடியாமல் அச்சிறுவன் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கிறான்.
பெற்றோர்கள் மகனை குணமாக்க பல மருத்துவர்களிடம் சென்றுள்ளனர். ஆனாலும், பலன் கிடைக்கவில்லை. ஆயுர்வேதம் சித்த மருத்துவமும் எடுபடவில்லை என்று பெற்றோர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அச்சிறுவனின் தந்தை பிரேம் குமார் கூறுகையில், மனைவி கர்ப்பமாக இருந்த நேரத்தில், தன் வீட்டுக்கு முன்பு இரு பாம்புகள் நடனமாடிக் கொண்டிருந்தது. பக்கத்துவீட்டு பெண் முறத்தால் அடித்ததால் காயம் பட்டு வீட்டு வாசலில் வந்து இறந்துவிட்டது.
பாம்புவின் ஆன்மா கொடுத்த சாபத்தால் என் மகன் பொன்குமரனுக்கு இவ்வாறு நேர்ந்து விட்டதா என்று தெரியவில்லை. பல கோயில்களுக்கு சென்று வந்தோம்.
பல வைத்திய முறைகளை பின்பற்றிவிட்டோம். லட்சக்கணக்கான ரூபாய் செலவில் பார்த்தும் ஒன்றும் பலன் கிடைக்கவில்லை என்று வேதனையுடன் கூறினார். சிறுவனுக்கு சிறந்த மருத்துவ மளிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.