கொரோனா விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு சத்துணவு : தமிழக அரசு உத்தரவு
அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியதை அடுத்து கொரோனா மூன்றாவது அலையும் தற்போது தொடங்கிவிட்டது.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் முதலில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு , ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.
அதேபோல் கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு ஜன.31 வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், பொங்கல் விடுமுறைக்குப் பிறகு அனைத்து வகுப்புகளுக்கும் ஜன 31 வரை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வாயிலாக பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க மதிய உணவுக்கு பதிலாக உலர் உணவுப்பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் பொருட்களுடன் 5 முட்டைகளையும் சேர்த்து வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்திற்கான வேலை நாட்களை கணக்கிட்டு பொருட்களை விநியோகிக்க வேண்டும் எனவும், கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு வழங்குமாறும் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.