மதுரை ஷவர்மா கடைகளில் அதிரடி ரெய்டு - கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்; 5 கடைகளுக்கு நோட்டிஸ்
மதுரையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில், 5 ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்.
கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தனியார் உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும் மாணவியின் மரணத்திற்கு அசுத்தமான உணவு மற்றும் நீரில் பரவக்கூடிய ஷிகெல்லா பாக்டீரியா தான் காரணம் என்றும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள 52 கடைகளில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயராம் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
பரிசோதனையின் போது 10 கிலோ பழைய சிக்கன் கறிகள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து 5 கடைகளுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், சிக்கன் ஷவர்மா கடைகளில் பழைய சிக்கன் கறிகளை பயன்படுத்தக்கூடாது, சமைத்த உணவுப்பொருட்களை ஃப்ரீசரில் வைக்க கூடாது, உணவுப்பொருட்களில் வண்ணம் சேர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.