பறக்கும் படையினர் சோதனை: இத்தனை கோடி ரூபாய் சிக்கியதா?
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பறக்கும் படையினர் 650 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு
இதுதொடர்பில் வெளியான செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் கடந்த மார்ச் 15ம் தேதி அறிவிக்கப்பட்டன.
தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானது, இதன்படி தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் அதன் எல்லையில் உள்ள 12 மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது.

இதன் தொடர்ச்சியாக 5 ஆயிரத்து 173 பறக்கும் படைகளும், 5 ஆயிரத்து 200 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
650 கோடி ரூபாய்
மேற்கு வங்கத்தில் மட்டும் 11 கோடி ரூபாய் ரொக்கம், 150 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப்பொருட்கள் உட்பட மொத்தம் 319 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக, தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் ரொக்கம், 63 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் உள்பட 170 கோடி ரூபாய் மதிப்பிலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அஸ்ஸாமில் 97 கோடி ரூபாய், கேரளாவில் 58 கோடி ரூபாய் மற்றும் புதுச்சேரியில் 7 கோடி ரூபாய் என 650 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
