அரசு பள்ளியில் சூழ்ந்த மழை வெள்ளம் - உள்ளே செல்ல முடியாமல் தவித்த ஆசிரியர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மகாராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கிதால் ஆசிரியர்கள் உள்ளே செல்ல முடியாமல் பரிதவித்தனர்.
பள்ளியை சூழ்ந்த மழை வெள்ளம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.விருதுநகர் மாவட்டத்திலும் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
நேற்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக மகாராஜபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் இன்னும் திறக்கப்படாததால் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. ஆனால் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில் என்னும் எழுத்தும் என்ற பயிற்சி நடைபெற்று வருகிறது.
பள்ளிக்குள் செல்ல முடியாமல் தவித்த ஆசிரியர்கள்
நேற்று மகாராஜபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற்ற நிலையில் இன்று பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கியதால் ஆசிரியர்கள் பள்ளிக்குள் செல்ல முடியாமல் நுழைவு வாயிலில் காத்திருந்தனர்.
பின்னர் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் அருகில் உள்ள தம்பிபட்டி தொடக்கப்பள்ளிக்கு பயிற்சி மாற்றப்பட்டது. தொடர்ந்து மழை பெய்யும் காலங்களில் இந்த பள்ளி வளாகத்திற்குள் மழை நீர் தேங்குவதாகவும் மாவட்ட நிர்வாகமோ? ஊராட்சி நிர்வாகமோ? கண்டு கொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் மழைநீர் செல்வதற்கு போதுமான வசதி இல்லை எனவும் ஆக்கிரம்புகள் அதிகமாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.