தொடர்மழை எதிரொலி : தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
5 மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோடை காலம் என்பதால் நாடு முழுவதும் கத்தரி வெயில் வாட்டி வதைத்துகொண்டிருக்கும் சமயத்தில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி,பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும், தென்பெண்ணை ஆற்றில் மக்கள் குளிக்கவோ,ஆற்றில் இறங்கி கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.
தென் பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்த்துள்ளது.
கே.ஆர்.பி. அணையில் இருந்து வினாடிக்கு 1,117 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் எனவும் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.