வெள்ளத்தில் அடித்துச் சென்ற பெண் உடல் மீட்பு- ரூ.4 லட்சம் கருணை நிதியுதவி
புதுச்சேரியில் கனமழை வெள்ளத்தில் ஸ்கூட்டருடன் அடித்து செல்லப்பட்டு இறந்த பெண் குடும்பத்திற்கு ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க அறிவித்துள்ளார். புதுச்சேரியில் ஒரே நாளில் 21 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையம், பாரதிபுரம் பகுதியில் வெள்ளவாரி வாய்க்காலில் அதிக வெள்ளத்தண்ணீர் ஓடியது.
சண்முகாபுரம், வடக்கு பாரதி புரத்தைச் சேர்ந்தவர் அசினாபேகம் (38). இவர் நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு வெள்ளவாரி வாய்க்காலில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை எடுக்கச் சென்றார். அப்போது, காட்டாற்று வெள்ள நீரில் அசினா பேகம் ஸ்கூட்டருடன் அடித்து செல்லப்பட்டார். 500 மீட்டர் துாரத்தில் ஸ்கூட்டர் மட்டும் கரை ஒதுங்கியது.
அசினாபேகத்தை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ரெட்டியார்பாளையம் வாய்க்கால் பகுதியில் நேற்றும் தேடி வந்தனர். அப்போது, நேற்று மதியம் 1:00 மணிக்கு கனகன் ஏரியில் அசினாபேகம் இறந்த நிலையில் உடல் கரை ஒதுங்கியது.

அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் அசினாபேகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழைநீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்த அசினாபேகத்தின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து, கருணை தொகையாக ரூ.4 லட்சம் வழங்கப்படும். அவரது பிள்ளைகளின் படிப்புச் செலவை அரசே ஏற்கும் என அதில் தெரிவித்துள்ளார்.