தமிழகத்தில் முழு ஊரடங்கு எதிரொலி - வெறிச்சோடிய சென்னை விமான நிலையம்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று முதல் 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்லது. இதன் காரணமாக சென்னை விமானநிலையத்தில் சா்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் பயணிகள் கூட்டமில்லாமல் வெறிச்சோடின.
உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் இன்று 104 விமானங்கள் ரத்து, சா்வதேச விமானநிலையத்தில் இன்று 10 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
சென்னை சா்வதேச விமானநிலையத்தில் வழக்கமாக வெளிநாடுகளிலிருந்து வந்தே பாரத் மற்றும் சிறப்பு விமானங்கள் தினமும் 20 க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்துகொண்டிருந்தன.
ஆனால் இன்று 3 வந்தே பாரத் விமானங்கள் உட்பட 10 விமானங்கள் மட்டுமே வருகின்றன.அதிலும் மிகவும் குறைவான பயணிகளே வருகின்றனா். அதைப்போல் சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலும் இன்று மிகவும் குறைவாக 50 புறப்பாடு விமானங்கள், 49 வருகை விமானங்கள் மொத்தம் 99 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
அதில் வருகை பயணிகள் சுமாா் 2 ஆயிரம், புறப்பாடு பயணிகள் சுமாா் 4,500. புறப்பாடு பயணிகளில் சுமாா் 2 ஆயிரம் போ் வட மாநிலங்களுக்கு சொந்த ஊா் திரும்புபவா்கள். சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வருகை, புறப்பாடு விமானங்கள் 270 விமானங்கள் வரை இயக்கப்பட்டன.
பயணிகள் எண்ணிக்கை 30 ஆயிரம் வரை இருந்தது. அதோடு ஒப்பிடும்போது பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு குறைந்து விட்டது. இவைகள் தவிர சென்னை உள்நாட்டு விமானத்தில் இன்று 104 விமானங்கள் பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதில் 50 விமானங்கள் சென்னையிலிருந்து புறப்படுபவைகள், 54 விமானங்கள் சென்னைக்கு வரும் விமானங்கள். பயணிகள் இல்லாததால் சில விமானங்கள் 2 அல்லது 3 விமானங்கள் இணைக்கப்பட்டு ஒரே விமானமாக சென்றது.
தற்போது கொரோனா முடக்கத்தால் விமான போக்குவரத்து மீண்டும் தொய்வடையும் நிலையை நோக்கிச் செல்கிறது.