தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.. மகனுக்காக தந்தை செய்த நெகிழ்ச்சி சம்பவம்
உடல் நலமில்லாத தனது மகனுக்கு மருந்து வாங்க சுமார் 300 கி.மீட்டர் சைக்கிளில் பயணம் செய்த தந்தையை இணைய வாசிகள் பாராட்டி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து 30 கி.மீ தூரத்தில் இருக்கிறது நரசிபூர் தாலுகா.அம்க்கு உள்ள கோப்பலு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். கூலித் தொழிலாளியான இவருக்கு 10 வயதில் மகன் ஒருவன் இருக்கிறார்.
அந்த சிறுவனுக்கு நரம்பு தொடர்பான பிரச்னை இருப்பதால் அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை இலவசமாக மருந்து வழங்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள் ஒரு நாள் கூட மாத்திரை சாப்பிடாமல் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தி இருந்தனர்.
ஆனால், அவர் மே மாதத்துக்கான மாத்திரையை வாங்க, பெங்களூரு செல்ல வேண்டும். தற்போது கொரோனா ஊரடங்கினால் போக்குவரத்து வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் தனக்குத் தெரிந்த, நண்பர்களிடம் இருசக்கர வாகனத்தைக் கேட்டுப் பார்த்தார் ஆனந்த அவர்கள் அனைவரும் மறுத்துவிட்டனர்.
ஊரடங்கு நேரத்தில் பைக்கில் சென்றால்,காவல்துறையினர் பறித்துவிடுவார்களோ என பயந்த ஆனந்த் சைக்கிளில் செல்வது என்று முடிவு செய்தார்.
அதன்படி தனது கிராமத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 3 மணிக்கு புறப்பட்ட அவர், 2 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து செவ்வாய்க்கிழமை காலை மருத்துவமனையை அடைந்தார்.
அங்கு இவர் நிலையை அறிந்த மருத்துவர் ஒருவர் ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். வழியில் தங்கிய இடத்தில், சிலர் அவருக்கு உணவளித்துள்ளனர்.
பின்னர் புதன்கிழமை இரவு சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
இதுபற்றி ஆனந்த் கூறும்போது எனது சைக்கிள் மிகவும் பழையதுதான் ஆனால் மகனுக்கு மருந்து முக்கியம் ஆகவே அதில் சென்று மருந்து வாங்கிவிட்டு வந்துவிட்டேன்.
அங்குள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் எனக்கு உதவினர். என் மகனுக்கு சரியான நேரத்தில் மாத்திரையை வாங்கிவந்துவிட்டேன். வந்த பிறகு எனது இடுப்பில் கடுமையான வலி. தொடர்ந்து நான்கு நாட்கள் சைக்கிள் மிதித்து வந்ததால் ஏற்பட்ட வலி அது. பிறகு மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொண்டேன்' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஆனந்த்.
Karnataka: A 45-year-old Anand, a resident of Koppalu village in Mysore cycles 300 km to Bengaluru to bring his son's medicine
— ANI (@ANI) June 1, 2021
"I asked for my son's medicines here but couldn't find it. He can't skip medicines even for a day. I went to Bengaluru & it took me 3 days," says Anand pic.twitter.com/nnAUBIBqna
இந்த ஊரடங்கு ஆனந்திற்கு பெரிதாக தெரிவில்லை அவரது லட்சியம் எல்லாம் அவரது மகன் தான் . தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.