சென்னை அணியால் கேள்விக்குறியாகும் இளம் கிரிக்கெட் வீரரின் எதிர்காலம்
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் ராஜவர்தன் ஹங்ரேக்கருக்கு ஏன் இதுவரை வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது குறித்து அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங் விளக்கமளித்துள்ளார்.
2022 ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் வெறும் 2 போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
இதனால் அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதே கடினம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல ஐபிஎல் ஏலத்தில் அதிகமான இளம் வீரர்களை எடுத்த சென்னை அணி அவர்களில் ஒருசிலருக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறது.
அந்த வகையில் 19 வயதுகுட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிக முக்கிய வீரராக ஜொலித்த ராஜவர்தன் ஹங்ரேக்கரை ஐபிஎல் ஏலத்தில் 1.5 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி எடுத்தது. ஆனால் இதுவரை அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தீபக் சாஹருக்கு பதிலாக அவரது இடத்தில் களமிறக்கப்பட்ட துசார் தேஸ்பாண்டே, முகேஷ் சவுத்ரி போன்ற வீரர்கள் தொடரின் ஆரம்பத்தில் சொதப்பினர்.
இதனால் ஹங்கரேக்கருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாய்ப்பு கொடுக்கப்படாததால் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை சென்னை அணி வீணடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ராஜவர்தன் ஹங்ரேக்கர் திறமையான வீரர் என்பது அனைவருக்கும் தெரியும்.
அவருக்கான நேரம் வரும் பொழுது நிச்சயம் வாய்ப்பு கொடுக்கப்படும். சம்பந்தமே இல்லாமல் ஹங்ரேக்கருக்கு வாய்ப்பு கொடுத்து அவரது திறமையை வீணடிக்க விரும்பவில்லை என ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். இந்த தொடரிலேயே ஹங்ரேக்கர் விளையாட தேவை ஏற்பட்டால் நிச்சயம் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.