சட்டவிரோத கூட்டம் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட 5,000 பேர் மீது வழக்கு
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி நேற்று தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழ்நாடு பாஜக நடத்தியது .
இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப்பொவதாக அண்ணாமலை அறிவித்து இருந்த நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்திரனம் அரங்கம் அருகே பாஜகவினர் ஒன்றுகூடினர். அங்குள்ள முக்கிய முழுவதுமாக மறித்து நின்ற பாஜகவினர் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து கோட்டை நோக்கி பேரணி செல்வதாக இருந்த நிலையில், எழும்பூரிலேயே பாஜக தொண்டர்கள் மத்தியில் அண்ணாமலை உரையாற்றினார். தமிழ்நாடு அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை அண்ணாமலை முன்வைத்தார்.
இதனிடையே போராட்டத்திற்கு வந்திருந்த அண்ணாமலை திடீரென அங்கு இல்லாததால் தொண்டர்கள் அவரை தேடினர்.
போலீசார் தடுத்ததால் அண்ணாமலை ஆட்டோவில் ஏறி கோட்டைக்கு சென்றிருக்கலாம் என்ற தகவல் இணையதளத்தில் பரவியதால் போலீசார் ஆட்டோக்களை நிறுத்தி சோதனையிட்டனர்.
பாஜகவினரின் இந்த போராட்டம் காரணமாக எழும்பூர், அண்ணாசாலை, ஈ.வே.ரா. பெரியார் சாலை, ஆதித்தனார் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 5 ஆயிரம் பேர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.
சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவுக்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீல் போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர்.