யாழில் பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பு- ஐவர் கைது

Police Jaffna Arrest
By Kanagasooriyam Mar 08, 2021 05:58 PM GMT
Report

ஒரு கிலோ கஞ்சா மற்றும் 6 கிராம் ஹெரோயினுடன் யாழ் பொலிஸ்நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் பிரதிப் கப்புலியத்த தலைமையிலான பொலிஸார் நேற்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது. யாழ் குருநகர் பகுதி தண்ணீர் தாங்கி வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 3 கிராம் தூய ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் அப்பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்;.

இதேவேளை யாழ் மணியந்தோட்டம் பகுதியில் நுகர்வு மற்றும் விற்பனைக்காக ஹெரோயின் போதைப்பொருளை கையிருப்பில் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர் கைது செய்யப்பட்ட நபர்கள் 23, 21, 28 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ் குருநகர் பகுதியில் கடற்கரைவீதியில் விற்பனைக்காக வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 1 கிலோ 370 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாரை கண்டதும் கஞ்சாவை தீயிட்டு கொழுத்த முற்பட்டவேளை குறித்த நபரை பொலிஸார் கைது செய்ததுடன் கஞ்சாவையும் மீட்டனர் கைது செய்யப்பட்ட நபர் அப்பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.