தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கொன்றது கண்டனத்திற்குரியது!

sea shoot dead
By Jon Jan 21, 2021 07:02 PM GMT
Report

கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 4 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தி, விசைப் படகோடு மூழ்கடித்துக் கொன்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: இந்தக் கொலைவெறித் தாக்குதலுக்கு பிரதமர் திரு. மோடி கண்டனம் தெரிவிப்பதுடன், கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி - விசைப்படகோடு மூழ்கடித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கடலில் மூழ்கடிக்கப்பட்ட மெசியா, நாகராஜ், சாம், செந்தில்குமார் ஆகிய நான்கு மீனவர்களின் உடல்களும் இப்போது மீட்கப்பட்டுள்ளன என்ற பேரிடிச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் - மீன்பிடி உரிமையின் அடிப்படையிலும் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், இழப்பீடுகள் எதுவும் கொடுக்கமாட்டோம் என்று இலங்கை கடற்படை அறிவிப்பதும் அடாவடியானது, அராஜகமானது. இலங்கை அரசின் இந்த அட்டூழியங்களை மத்திய பா.ஜ.க. அரசு தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்ப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

சமீபத்தில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், மீனவர்கள் பிரச்சினை குறித்துப் பேசியதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் இந்தியா திரும்பியவுடன் இலங்கைக் கடற்படை நான்கு மீனவர்களைக் கொன்றிருப்பது, இலங்கையில் உள்ள ராஜபக்சே சகோதரர்கள் இந்திய நாட்டையோ, இந்திய மத்திய அரசையோ துளி கூட மதிப்பதில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

எனவே, தமிழக மீனவர்கள் நான்கு பேரை மூழ்கடித்துக் கொன்றிருப்பதற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி உடனடியாக இலங்கைக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.