9 வயது சிறுவனை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு - குமரியில் அதிர்ச்சி சம்பவம்
கன்னியாகுமரியில் 9 வயது சிறுவனை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சைமன்(48). மீனவரான இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுவனை பல நாட்களாக மிட்டாய் வாங்க பணம் தருவதாக கூறி தனியாக வரும்படி அழைத்துள்ளார் .
இதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்துள்ளான். இந்த நிலையில் இன்று மாலை சிறுவன் வீட்டின் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடி முடித்துவிட்டு நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த சைமன் சிறுவனை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து கடத்தி சென்று அருகில் உள்ள ஒரு தோப்பிற்குள் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். இது சம்பந்தமாக சிறுவன் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை அழைத்துகொண்டு கொல்லங்கோடு போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் சைமனை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ள சைமன் தனக்கு பல நாட்களாக இந்த சிறுவன் மீது ஆசை இருந்ததாகவும் இதனால் சிறுவனை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தாகவும் தெரிவிக்க கொல்லங்கோடு போலீசார் சைமனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.